இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-8)

ஆலய அமைப்பு முறைகள் பெரும்பாலும் அறிவு மறைக்கப்பட்ட மக்கள் அறிவை பெருக்க வழிகாட்டும் படியாக நன்னெறியில் வழுவாது இருக்கும் படியாக ஒழுக்கம் மரியாதை வளர ஒரு ஆரம்ப பாடசாலையாக அமைக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.

ஆலயம் ஒரு மனித உடலுடன் ஒருமைப்படுத்தப்பட்ட அமைப்பாக விளங்குமாறு கட்டப்பட்டுள்ளது.இதற்கு காரணம் மனிதர் தம்மை யாரென்று அறிந்து கொள்ளவே ஆகும்.அவ்வாறு அறிகுறிப்பொருளாய் இறைவன் இவ்வாலயங்களில் வீற்றிருக்கிறார்.நாமும் மெய்ப்பொருளை அறிவதற்கும் அருள் நெறியை பெற்று எமது இச்சைகள் ஆசைகள் அளவுக்கதிமாகச் செல்லாது பாதுகாப்பதற்கும் ஆராதணை முறையில் பங்கு கொள்வது கடமையாகும்.பெரும் பணம் சேர்த்து நிதி வாரி வழங்கி ஆலயம் அமைப்பது பெரிதில்லை.கும்பாபிஷேகம் செய்து ஆண்டு விழாக்கள் செய்து தேரோடி வீதி எங்கும் அலங்காரம் செய்வது பெரிய விடயமில்லை.நித்தியம்,நித்தியாங்கம்,நியமம் தவறாது ஆராதணை வழிபாடு ஏற்ற வேண்டும்.ஆலயங்களில் தினமும் அர்ச்சகர் காலை,மாலை ஆலயங்களில் பிரதிஸ்டை செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு முறைப்படி பால் அல்லது நீரினால் அபிஷேகம் செய்து பட்டு சாத்தி பொட்டு வைத்து பூச்சாற்றி நித்திய நேரம் தவறாது ஆலயமணியோசையால் ஆய்த்த மணி அடித்து மக்களுக்கு அறிவித்து பூஜை ஆராதணை சரியான நேரத்தில் மணிசங்க நாத ஓசையுடன் ஆரம்பித்து செய்தல் வேண்டும்.அவ்வாறு பூஜை செய்யு முன் நைவேத்தியமாக காய்ச்சிய பால் அல்லது சுன்னம் நிவேதனம் பண்ணி இறைவனுக்கு படைத்து வழிபாடாற்றுவது அர்ச்சகர் எனப்படும் அந்தணர் கடமையாகும்.
அந்தணர் நித்திய ஆராதணை பூஜைகளை முறையோடு செய்யும் தருணம் அவர் ஒழுக்க சீலர்களாக வேதம் கற்றுணர்ந்தவர்களாக தீஷை முறைகளை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டியது அவசியமாகும்.இறைவன் புனிதமானவர்.அவர் பாகுபாடில்லாது எவருக்கும் அருள் சக்தி
வழங்க வல்லவர்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏழை,செல்வந்தன்,படித்தவன்,மூடன்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,பிராமணன்,சூத்திரன் என்ற பாரபட்சம் ஏதும் இல்லாது எல்லா ஆன்மாக்களுக்கும் அருள் பாலித்து வருகிறார்.
இந்து சமய நூல்கள் புராணநூல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாம் அறியலாம்.இறைவன் எமக்கு அருட்சக்தி கொடுப்பதற்கு நாம் அவரில் நம்பிக்கை வைக்க வேண்டும்.பூஜை ஆராதணைகளில் தவறாது கலந்து கொண்டு வழிபாடாற்ற வேண்டும்.ஆராதணை முறையில் நித்தியம் நித்தியாங்கம் என இரு பிரிவுகளைப்பார்த்தால் நித்தியம் என்பது தினமும் செய்யும் பூஜை ஆராதணை ஆகும்.நித்தியாங்கம் எனப்படுவது ஆலயத்தில் இருக்கும் விக்கிரகங்கள் அதாவது கருவறை எனப்படும் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் பிராதன மூர்த்தியில் இருந்து ஏனைய பரிவார மூர்த்திகள் வரை அனைத்து விக்கிரகங்களுக்கும் சுத்தமான நீரினால் அபிஷேகம் செய்தல்.தூய்மையான பட்டு கட்டுதல்,பூமாலை சாற்றுதல்,சந்தனம்,குங்குமம் பொட்டிடுதல்,அலங்காரம் செய்தல்,ஆலயத்தை சுத்தம் செய்தல்,கூட்டுதல்,கழுவுதல்,தீபங்களுக்கு திரியிடுதல்,எண்ணெய் ஊற்றுதல்,விளக்கேற்றுதல்,பூஜைப்பொருட்கள் தூபம்,தீபம்.கற்பூரத்தட்டு,கைமணி,தீர்த்தச்சொம்பு,பூஜைத்தட்டு இவற்றை பூஜைக்கு தயாரக வைத்தல் நைவேத்தியம் வெள்ளை அன்னம் அல்லது சக்கராண்னம் ஆலய மடப்பள்ளியில் பூஜைக்கு முன்பாக தயாரித்து வைத்து கொள்ளுதல்,அர்சசனைக்கு தேவையான பழம் வெற்றிலை,பாக்கு,தேங்காய்,அனைத்தையும் தட்டுகளில் எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்தல்.கற்பூரம்,சாம்பிராணி யாவற்றையும் தயாராக வைத்தல்.பூஜைக்கு தேவையான பூக்கள் தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளல் சரியான நேரத்தில் நைவேத்தியம் கிண்ணங்களில் எடுத்து ஸ்வாமிக்கும் படைத்தல் தூபம் காட்டி பூஜைக்கு தயார்படுத்தல்.
பின்னர் ஆயத்தமணி அடித்து பூஜையை தொடங்கல் வேண்டும்.திரையிட்டு மறைத்துள்ள மூர்த்திகளின் திரை நீக்கி விநாயகப்பெருமானுக்கு ஆராதணை முதன் முதலாக செய்து மூல விக்கிரகத்திற்கு முறைப்படி மந்திரம் பாவனை கிரியை முறை வழுவாது பூஜித்து அடுத்து சுப்பிரமணியர்,நடராஜர்,துர்க்கை அம்மன் முனிஸ்வரர் சோமாஸ்கந்தர் இப்படி பரிவார மூர்த்திகளுக்கு ஆராதணை செய்த பின் நவக்கிரகங்கள் கொடிமரம் நந்தி பலிபீடம் கடைசியில் சண்டேசுவரர் பூஜையுடன் பூஜை நிறைவு பெறும்.அதன் பின் வீபூதீ,தீர்த்தம்,சந்தனம்,குங்குமம் பூக்கள் யாவும் அர்ச்சகர் அடியார்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.அதன் பின் இறைவனை வேண்டி அர்ச்சணை செய்வார்.அந்தணர் அடியவரின் காணிக்கை பொருட்களை இறைவனிடம் சமர்பித்து அவருக்கு வேண்டிய நிறைந்த அருட்சக்தி வழங்க வேண்டும் என ஆண்டவனிடம் முறையிடுவார்.இறைவனும் எமது குறைகளை நிவர்த்தி செய்திடுவார்.
அடுத்ததாக நைமித்தியம் : – பூஜைமுறைகள் இப்பூஜை ஆராதணை சிறிதும் பெரிதுமாக விளங்கும்.வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறை இருவாரத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு ஒரு முறை விழாக்கள் நடைபெறும்.

தொடரும்……..

Did you enjoy this post? Why not leave a comment below and continue the conversation, or subscribe to my feed and get articles like this delivered automatically to your feed reader.

Comments

No comments yet.

Sorry, the comment form is closed at this time.